யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது டொனால்ட் டிரம்ப் -ன் உண்மையான ‘எக்ஸ் கணக்கு (Original Account)’ அல்ல. இது ’Ashwini Shrivastava’ என்னும் நபரால் இயக்கப்படும் Parody Account. அப்படியொரு கருத்தை டிரம்ப் சொல்லவில்லை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த நவம்பர் 5ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து, அதற்கு மறுநாளான நவம்பர் 6ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது ’எக்ஸ்’ கணக்கில் பதிவிட்டிருந்தார்.
இந்த வாழ்த்து செய்திக்கான தனது மறுமொழியில், ”நன்றி சொரோஸின் ஏஜெண்ட் ராகுல் காந்தி. ஆனால் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்- சொந்த நாட்டிற்குத் துரோகம் செய்யும், ஜார்ஜ் சொரோஸ் போன்ற இந்திய எதிர்ப்புக் சக்திகளுடன் சேர்ந்துகொண்டு, தாய்நாட்டிற்குக் குழிபறிக்கும் உங்களைப் போன்றவரால் என்னுடைய லட்சியங்களுக்கோ அல்லது அமெரிக்காவிற்கோ உண்மையாக ஆதரவளிக்க முடியாது. நீங்கள் உங்களுடைய வேலையில் கவனம் செலுத்துங்கள் ராகுல்” டிரம்ப் என்று குறிப்பிட்டதாக ’எக்ஸ்’ தளத்தில் பாஜகவைச் சேர்ந்தவர்களால் பரப்பப்படுகிறது.
இந்த ஜார்ஜ் சொரோஸ் என்பவர், "அதானி குழுமத்திற்கு எதிரான அறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக இருக்கிறார்” என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவி சங்கர் பிரசாத்தால் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை என்ன?
ராகுல் காந்தியின் வாழ்த்துச் செய்திக்கு டொனால்ட் டிரம்ப் ஏதேனும் அதிகாரப்பூர்வ மறுமொழி கூறியிருக்கிறாரா என்று இணையத்தில் தேடியதில் அப்படியொரு செய்தி காணப்படவில்லை.
பின்னர், டொனால்ட் டிரம்ப் போட்ட டிவீட் என்று பரப்பப்படுவதில் உள்ள IDயை ’எக்ஸ்’ தளத்தில் தேடியதில், அது ‘Ashwini Shrivastava’ என்பவரால் நிர்வகிக்கப்படும் ஒரு ‘Parody Account’ என்பது தெரியவந்தது.

இது பாஜக ஆதரவு அல்லது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கணக்கு இல்லை. இருப்பினும், இந்த Parody Accountயை கவனித்தால், இதில் தொடர்ந்து பாஜகவின் நிலைப்பாடுகளை ஒட்டிய டிவீட்கள் இருப்பதைக் கண்டுகொள்ளமுடியும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதற்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதிவிற்கு மறுமொழியாக, “ஆஸ்திரேலிய அணியை வென்றதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் விரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு பரிசாக வழங்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 2000 டாலர் கடன் கேட்டதாக” இந்த Parody Account-லிருந்து பதிவிடப்பட்டிருக்கிறது. மேலும் பாகிஸ்தான் அரசு, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படையில் இதுவொரு முஸ்லிம் வெறுப்பு பாகிஸ்தான் வெறுப்பு கருத்தாகும்.

இதேபோல், இஸ்ரேலிய கால்பந்து ஆதரவாளர்கள் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டதைக் கண்டித்து, ”யூத சமூகங்களை அச்சுறுத்தும் இஸ்லாமிய பயங்கரவாதத்தைச் சகித்துக்கொள்ள முடியாது” என்று டொனால்ட் டிரம்ப் சொன்னதை போல டிவீட் இந்த கணக்கிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து பாஜகவின் அரசியல் கருத்துகள், டொனால்ட் டிரம்ப்-ன் ரசிகர் கணக்கு என்று சொல்லப்படும் இந்த தளத்தில் இருந்து தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகிறது என்பது தெளிவாகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான், ராகுல் காந்தியை ”சொந்த நாட்டிற்குத் துரோகம் செய்பவர்” என்று டிரம்ப் கூறியதைப் போன்ற டிவீட் பதிவிடப்பட்டுள்ளது. அப்படியொரு கருத்தை டொனால்ட் டிரம்ப் சொல்லவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைச் சிறுமைப்படுத்தும் வகையில் இந்த டிவீட்டை பாஜகவினர் தவறாக பரப்பி வருகின்றனர்.
முடிவு:
அப்படியொரு கருத்தை டொனால்ட் டிரம்ப் சொல்லவில்லை. மேலும், இது டொனால்ட் டிரம்ப் -ன் உண்மையான ‘எக்ஸ் கணக்கு (Original Account)’ அல்ல. இது ’Ashwini Shrivastava’ என்னும் நபரால் இயக்கப்படும் Parody Account ஆகும். எதிர்க்கட்சித் தலைவரைச் சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் இந்த டிவீட் பாஜகவினரால் தவறாக பரப்பப்படுகிறது.
